வெள்ளி, ஜனவரி 15, 2010

நோர்வேயின் முதன்மை வெளிநாட்டவராக தமிழர் தெரிவு


நார்வே   பத்து முதன்மை (top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


நார்வே  சமூகத்தின் சமூகக் கலாச்சார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது.

16 வயதிற்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது.

இவ்வகையில், நோர்வே, பேர்கன் பல்கலைக்கழக, பொறியியல்துறையில் பேராசிரியராக கடமைபுரியும் திரு வேலாயுதபிள்ளை தயாளனை இவ்வமைப்பு 10 முதன்மையான வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தெரிவு செய்துள்ளது.

பேராசிரியர் தயாளன் அவர்கள் 1984 ம் ஆண்டிலிருந்து நோர்வேயில் வசித்து வருபவர். தான் பிறந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒருவரான இவர், பேர்கனில் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் அக்கறையோடு செயற்பட்டு வருவதோடு, பேர்கன் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அதிபராகவும் சேவையாற்றி வருகிறார்.

இளைய சமூகம் பல்வேறு ஆளுமைகள் கொண்ட வளம்மிக்க சமூகமாக வளரவேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்படும் பேராசிரியர் தயாளன், நோர்வே TECH அமைப்பின் தலைவராகவும் இருந்து, தனது மண் வளம்பெற தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.

பேராசிரியர் தயாளன், பேர்கன் பல்கலைக்கழகத்தின் முதன்மைப் பேராசிரியராக மாணவர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அத்துடன் நோர்வேஜிய அரசுக்கு, குடியேறியவர்க்கான விடயங்களில் ஆலோசனை வழங்கும் KIM அமைப்பில் நோர்வேஜிய அரசினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் நோர்வேஜிய கல்வித்திணைக்களத்துக்கான ஆலோசனைக்குழுவிலும், நோர்வேஜிய ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவிலும், மற்றும் வேறு அரச, அரச சார்பற்ற ஆலோசனைக் குழுக்களிலும் பேராசிரியர் தயாளன் அங்கம் வகித்து வருகிறார்.

தமிழர்களுக்குப் பெருமை தரும் விதத்தில் அமைந்துள்ள இத்தெரிவையிட்டு தமிழ்மக்கள், குறிப்பாக மாணவர் சமூகம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

1 கருத்து :

welcome